Input your search keywords and press Enter.

ஜாதிய கணக்கீடுகளின் கீழ் உருவான கூட்டணி

தேர்தலில் வெற்றிக்கு மக்கள் பிரச்னைகள் முக்கியமல்ல. ஜாதி உள்ளிட்ட கணக்கீடுகளே முக்கியம். இதற்கு சமீபத்திய உதாரணம் அதிமுக-பாஜக கூட்டணி.
 
2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், தமிழகம் புதுச்சேரியில் தனித்து களம் இறங்கிய அதிமுக, புதுச்சேரி, கன்னியாகுமரி, தருமபுரி தொகுதிகளை தவிர 37 இடங்களையும் வென்று மாபெரும் வெற்றி பெற்றது. 
 
இதற்கு முக்கிய காரணம் மேற்கு மண்டலத்தில் அதிமுவுக்கு கிடைத்த கவுண்டர் வாக்குகளும், தென் மண்டத்தில் கிடைத்த முக்குலத்தோர் வாக்குகளும்தான்.
 
முக்குலத்தோர் வாக்குகள், ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான வி.கே.சசிகலா மூலம் கிடைத்தன.
 
மேற்குமண்டலத்தில் கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்தினர் தொடர்ந்து ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். எம்.ஜி.ஆர். இறப்புக்குப்பின் யாருக்கு கட்சியில் ஆதரவு உள்ளது என்ற நிலையில் 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் களம் கண்ட ஜெயலலிதாவுக்கு கொங்கு மண்டலம் ஏகோபித்த ஆதரவு அளித்தது. அந்த ஆதரவு 2014 ஆம் ஆண்டு வரையிலும் தொடர்ந்தது. 
 
இந்த ஆதரவினால் தான், ஜெயலலிதாவின் மரணத்திற்க்கு பிறகு, சசிகலா எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக அமைத்தார்.
 
அதிமுக கூட்டணியில் தற்போது பாமக-வுக்கு 7 தொகுதிகளும், பாஜகவுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. சிறிய கட்சிகளுக்கு 3 தொகுதிகள் வரை வழங்கப்படலாம் எனத் தெரிகிறது. விஜயகாந்தின் தேமுதிகவுடன் கூட்டணி இன்னும் உறுதியாகவில்லை.
 
தற்போதைய அதிமுக கூட்டணி முழுவதும் ஜாதி வாக்குகளை கணக்கில் கொண்டுள்ளதாகவே தெரிகிறது.
 
5% வாக்கு வங்கியை கொண்டுள்ள இராமதாஸின் பாட்டாளி மக்கள் கட்சி, வடமாவட்டங்களில் பெரும்பான்மையாக இருக்கும் வன்னியர்களை நம்பியுள்ளது.
 
பாஜகவுக்கு வழங்கப்பட்டுள்ள 5 இடங்களில், தற்போதைய அமைச்சராக இருக்கும் பொன் ராதாகிருஷ்ணனின் கன்னியாகுமரி தொகுதி மீண்டும் அவருக்கே வழங்கப்படலாம். மீதமுள்ள தொகுதிகள் தொழிற்சாலைகள் மற்றும் நகரப்பகுதிகள் நிறைந்த இடத்திலேயே வழங்கப்படலாம்.
 
‘த லீட்’-ற்க்கு பேட்டி அளித்த மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் சொன்னார் – “அதிமுகவின் பலத்தை பாஜக பயன்படுத்திக் கொள்ள முயல்கிறது. அதிமுகவுக்கு சாதமாக உள்ள கொங்கு வேளாளர் ஆதரவை வசப்படுத்த பாஜக தீவிரம் காட்டும் பாஜக, வேறு நபருக்கு சொந்தமான குளத்தில், தாமரையை மலரவைக்க  முயற்சிக்கிறது,” என்றார்.
 
அதிமுக வசம் மீதமுள்ள தொகுதிகளில் அந்த கட்சி கவுண்டர் மற்றும் தேவர் பகுதிகளில் கவனம் செலுத்தும் எனக் கூறப்படுகிறது.
 
கடந்தகாலங்களை நினைவு கூறும் பிராகஷ், 1989-ல் ஜெயலலிதா வென்ற 27 தொகுதிகளில் பெரும்பாலானவை கொங்கு மண்டலத்தை சேர்ந்ததுதான் என்கிறார்.
 
தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அரசில் அதிகாரம் செலுத்தும் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோரும் கவுண்டர் இனத்தவராக இருப்பதாலும், கொங்கு மண்டலத்தில் அதிமுகவுக்கு இந்த தொகுதிகளில் அதிக கவனம் செலுத்தும்.
அப்போ தேவர்கள்?
 
அதிமுகவிலிருந்து வி.கே.சசிகலா மற்றும் டி.டி.வி. தினகரன் விலக்கிவைக்கப்பட்டுள்ள நிலையில், முக்குலத்தோர் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது. துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்தவராக இருந்தாலும், அவர் எடப்பாடி அணியில் உள்ளதால், அச்சமூகத்தினர் அதிருப்தி அடைந்துள்ளனர் என்று அரசியல் நிபுணர் கூறுகிறனர். .
 
இது தினகரனுக்கு சாதகமாக இருக்கும் என கூறும் பத்திரிகையாளர் பிரகாஷ், தென் மாவட்ட தொகுதிகளில் தினகரனுக்கும் திமுகவுக்கும்தான் நேரடி போட்டி இருக்கும் என்றார்.
 
பேரவையே இலக்கு, நாடாளுமன்றம் அல்ல
 
கூட்டணி கட்சிகளுக்கு நாடாளுமன்ற தொகுதிகளை போதிய அளவில் விட்டுக் கொடுத்தாலும், 21 சட்டப்பேரவை இடைத்தேர்தல்களிலும், தங்களுக்கே ஆதரவு தெரிவிக்க வேண்டும் என ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது அதிமுக.
 
இது, நாடாளுமன்ற தேர்தலைவிட தமிழகத்தில் ஆட்சியை தக்கவைப்பதில் அதிமுக கவனம் செலுத்துவதையே காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
 
இதற்காகவே அவர்கள் பாமகவுடன் அவசரமாக கூட்டணி வைத்துள்ளனர் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் கே.வெங்கட்ரமணன். “சிறிது தாமத்திலாலும் பாமக, திமுக அணிக்கு சென்றிருக்கும் என்பதாலே, பாமகவை அதிமுக வளைத்துள்ளது,” என்றார்.
 
காலியாகவுள்ள 21 தொகுதிகளில் ஓசூர், பாப்பிரெட்டிப்பட்டி, ஹாரூர், சோளிங்கர், குடியாத்தம், பூவிருந்தவல்லி, திருப்போரூர் ஆகிய 8 தொகுதிகள் பாமக ஆதிக்கம் செலுத்தும் பகுதியில் வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *