Input your search keywords and press Enter.

எங்கே முகிலன்?

தமிழகம் முழுவதும் நடைபெறும் மணல் கொள்ளை எதிராக குரல் கொடுத்து வருபவர் முகிலன்.

சமூக செயற்பாட்டாளரான முகிலனை கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி இரவு முதல் காணவில்லை. அதுவும், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் போலீஸாருக்கு உள்ள தொடர்பு குறித்து அவர் வெளியிட்ட ஆவணப்படத்துக்குப் பிறகு…

கடந்த 15 ஆம் தேதி தனது உடன் செயற்பாட்டாளர் வி.பி.பொன்னரசனுடன் செய்தியாளர்களை சந்தித்த முகிலன், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சுமார் 40 நிமிடங்கள் ஓடக்கூடிய ஆவணப்படத்தை வெளியிட்டார்.

அதில் பல காவல் துறை உயர் அதிகாரிகள், தங்களது கடமையை மறந்தது குறித்தும் வன்முறையாளர்களுடன் கை கோர்த்தது குறித்தும் விளக்கமாக விவரிக்கப்பட்டிருந்த்து.

ஆவணப்படத்தில், குறிப்பிட்ட கும்பல் ஒன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை அடித்து உடைக்கிறது.

அதே கும்பல் பைக்குகளுக்கும், சைக்கிள்களுக்கும் தீ வைத்து கொளுத்துவதற்கு போலீஸார் அனுமதிக்கின்றனர் என்று முகிலன் கூறுகிறார்.

இச்செயல்கள் எல்லாம், போராட்டகாரர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து போலீஸார் துரத்திய பின்னரே அரங்கேற்றப்பட்டுள்ளன.

எனினும், அந்த வன்முறை கும்பல் யார் என முகிலன் அறுதியிட்டு கூறவில்லை. அவர்கள் ஸ்டெர்லைட் ஆலையினரால் கூட்டி வரப்பட்ட குண்டர்களாக இருக்கலாம் என்பது முகிலனின் கருத்து. அந்த கருத்திற்க்கு ஆவணங்கள் அவர் கொடுக்கவில்லை.

முகிலனின் இந்த பேட்டி மற்றும் ஆவணப்படம் எந்த பிராதன ஊடகங்களிலும் வெளியாகவில்லை.

திடீரென மாயமான முகிலன்

பத்திரிகையாளர் சந்திப்பை முடித்துவிட்டு, தனது நண்பரான Human Rights Defenders’ Alert – India அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆசீர்வாதத்தை தொடர்பு கொண்டு பேசியுள்ளார் முகிலன். அப்போது, மதுரையில் ஆசீர்வாதத்தை சந்திக்கவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இரவு 9.30 மணிக்கு ஆசீர்வாதத்துக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிய முகிலன், நாகர்கோவில் சிறப்பு ரயில் மூலம் மதுரை செல்வதற்காக எக்மோர் ரயில் நிலையம் செல்லுகிறேன் என தெரிவித்துள்ளார்.

‘த லீட்’-ற்க்கு பேட்டி அளித்த ஆசீர்வாதம் சொன்னார் – “முகிலன் தனது நெருங்கிய நண்பரான ஸ்ரீதரை தொடர்புகொண்டு, ரயில் தாமதமாக வருவதாகவும், காலை 10.30 மணிக்குதான் மதுரை வருவேன் என கூறியுள்ளார்.”

காலை 6 மணிக்கு முகிலனை தொடர்புகொண்டபோது அவரது போன் ஸ்வீச் ஆப் செய்யப்பட்டிருந்ததாக கூறும் ஆசீர்வாதம், அதன் பின்னர் அவரை தொடர்பு கொள்ளவே இயவில்லை என்றார்.

“பல இடங்களில் விசாரித்தும் முகிலன் குறித்த தகவல் கிடைக்கவில்லை. பி.எஸ்.என்.எல். நண்பர்கள் மூலம் விசாரித்ததில், விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூர் அருகே முகிலனின் செல்போன் இரவு 1.45 மணிக்கு ஸ்வீச் ஆப் செய்யப்பட்டுள்ளது,” என ஆசீர்வாதம் கூறினார்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக முகிலன் பல்வேறு ஆதாரங்களை வெளியிட்ட நிலையில் அவர் ரயிலில் இருந்து கடத்தப்பட்டிருக்கலாம் உயர் நீதிமன்றத்தில் ஆள்கொணர்வு மனுத்தாக்கல் செய்த மக்கள் கண்காணிப்பகத்தின் ஹென்றி திபேன் தெரிவித்துள்ளார்.

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்களில் முக்கியமானவர் முகிலன். இது தவிர ஜல்லிக்கட்டு போராட்டம், காவிரி மணல் கொள்ளை போராட்டங்களையும் முன்னெடுத்தவர். இதனால் பல மாஃபியா கும்பல்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் முகிலன் எதிரியானார்.

ஹென்றி திபேனுக்காக வழக்கு தாக்கல் செய்த வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் கூறுகையில் – “முக்கியமான ஆவணங்களை வெளியிட்ட முகிலன் காணாமல் போன நிலையில், அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கலாம் என அச்சம் உருவாகியிருக்கிறது,” என தெரிவித்தார்.

இதனிடையே வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சென்னை மாநகர காவல் ஆணையர், விழுப்புரம், காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி.க்கள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை பிப்ரவரி 22ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *